அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் “உலக அமைதிக்கான முக்கிய நாள்” என்று கூறியுள்ளார்.
ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பான கடற்பயணத்தை அனுமதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என இஸ்ரேல், கூறியுள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்க மறுத்தால் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றி பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.

இந்த முடிவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், ஈரான் அரசு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்க 10 அம்ச திட்டத்தை முன்வைத்து, அதில் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை அமெரிக்கா ஏற்க வேண்டும் மற்றும் அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் “எங்கும்” போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீராக நடைபெற அமெரிக்கா உதவும் என்றும், மேற்கு ஆசியாவில் புதிய “பொற்காலம்” உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]