டில்லி
ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றித்தர உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
உலகத்திலேயே இரண்டாவது பணக்கார தேவஸ்தானம் என புகழ்பெற்றது திருப்பதி தேவஸ்தானம். இங்கு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினம் சுமார் ரூ.650 கோடி வருமானம் வரும் இந்த தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50000 கோடிகள் ஆகும். இந்தக் கோவிலில் இதுவரை ரூ.8.29 கோடி அளவில், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் உள்ளன.
திருப்பதியில் மட்டுமின்றி, டில்லி, ரிஷிகேஷ், மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் கன்னியாகுமர் ஆகிய நகரங்களிலும் இந்த தேவஸ்தானத்தின் கோவில்கள் உள்ளன. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சேரும் பணம் வாரத்துக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு கோவிலும் சேர்ந்த காணிக்கைகள் ரூ.8.29 கோடி மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரசு கொடுத்த காலக்கெடு முடிந்த விட்டதால் ரிசர்வ் வங்கி இதற்கு புதிய நோட்டுக்கள் மாற்றித்தர மறுத்துவிட்டது.
இது குறித்து ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது வழக்கறிஞர் ஷ்ரவண் குமார் மூலமாக உச்சநீதி மன்றத்துக்கு இந்த நோட்டுகளை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடுமாறு கேட்டுக் கொண்டு மனு ஒன்றை அளித்துள்ளார். இதில் மேற்கூறிய தகவலுடன், ”கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் பல்வேறு பொது நல திட்டங்களுக்கும் ஆலய மேம்பாட்டுக்கும் செலவழிக்கப்படுகின்றது. அது மட்டுமின்றி ஆலயத்துக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்வு பூர்வமானது. அந்த காணிக்கைகள் இப்படி அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பக்தர்களின் மத உணர்வை புண்படுத்துவது போலாகும். அது தவிர, செல்லாத நோட்டுக்களை வைத்திருப்பது குற்றமாகும். எனவே விரைவில் இவற்றை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு ஆணை இட வேண்டும்” என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே லாக்கரில் இருந்த தொகையான ரூ.60 லட்சத்தை மாற்றித்தருமாறு ஒரு மனுவும், அரசால் கைப்பற்றப் பட்ட தொகையை புது நோட்டாக மாற்றித்தர வேண்டும் என மற்றொரு மனுவும் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. தற்போது இந்த மனுவும் அவைகளுடன் சேர்ந்துள்ளது,
உச்ச நீதி மன்றம் என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் கேள்வி!!