காரைக்கால்,

புதுச்சேரி அருகே காரைக்காலில் புளுவேல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

22வயதான இளைஞர் ஒருவர் உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக, தனது கையில் புளுவேல் படம் வரைய முயற்சி செய்தபோது போலீசாரின் அதிரடி நடவடிக்க காரணமாக  மீட்கப்பட்டார்.

நாடு முழுவதும் புளுவேல் விளையாட்டு காரணமாக நிகழும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே பலர் தற்கொலை செய்துள்ள நிலையில், இதுகுறித்து மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலை இளைஞர் ஒருவர் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காரைக்காலை  அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் வாட்ஸ் – அப் இணைப்பு மூலம் ப்ளூவேல் விளைாயட்டை கடந்த 20 நாட்களாக தொடர்ந்த விளையாடி வந்துள்ளார். நள்ளிரவிலும் விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்களிடம் தனது பேச்சை குறைத்து வந்துள்ளார்.

அவருக்கு புளுவேல் அட்மின் மூலம் நள்ளிரவு 2 மணிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிபணிந்து,  சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சுடுகாட்டிற்கு சென்ற அலெக்சாண்டர், அங்கிருந்து செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார்.

அலெக்சாண்டரின் வித்தியாசமான நடவடிக்கைகளை உணர்ந்த அவரது சகோதரர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அவரை கண்காணிக்க எண்ணி போலீசார் அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கையில் கத்தியுடன் அலெக்சாண்டர் தனது மற்றொரு கையில் புளுவேல் வரைய ஆயத்தமான நிலையில் இருந்தபோது போலீசாரால் மடக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு புளுவேல் விளையாட்டில் இருந்து வெளியேறுவது குறித்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாக  காவல்துறை அதிகாரி ரெட்டி கூறினார்.