
புதுடெல்லி: இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ராவின் பெயர், இந்தாண்டின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக வெளியான செய்திகள், அவரின் பெயர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கூறின என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோருடன் இணைந்து இவரின் பெயரும் இடம்பெற்றதாய் கூறப்பட்டது. ஆனால், தற்போது இஷாந்த் மற்றும் தவானுடன், கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு ரவீந்திர ஜடேஜா, பூணம் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அர்ஜூனா விருது பெற்றனர். இந்நிலையில், இந்தாண்டும் பும்ராவின் பெயர் விருது பட்டியலில் விடுபட்டுள்ளதானது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர், 14 டெஸ்ட்டுகள் ஆடி 68 விக்கெட்டுகளும், 64 ஒருநாள் போட்டிகள் ஆடி 104 விக்கெட்டுகளும், 50 சர்வதேச டி-20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளார்.