தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் மதுரை நீதிமன்றம், சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்கலாம், டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. முக்கிய சாட்சியம் அளித்த ரேவதிக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுக்காப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. சாத்தான் குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜின் வீட்டிலும், கடையிலும் சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.
அப்போது, விரையில் முடிவு தெரியும் என்று கூறினார். அதே நேரத்தில் சாத்தான்குளம் தந்தை,மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. 6 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.