டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு  பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, திரையுலகத்தினர், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட  பலரும் பிம் கேர்ஸ்  நிதியத்திற்கு பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ஆனால், கொரோனா பரவலை தடுக்க நிவாரணம் பெற பிரதமர் மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழும் பதில் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், கொரோனாவுக்கான சிறப்பு நிதியான பிஎம் கேர்ஸ் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக பிஎம் கேர்ஸ்  நிதியிலிருந்து ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (275), டெல்லி  (275), குஜராத் (175), பீகார் (100), கர்நாடகா (90), ராஜஸ்தான் (75) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதிக்குள் 14,000 வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இந்த பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைபோல், மகாராஷ்டிரா ரூ.181 கோடி உத்திரப்பிரதேசம் ரூ.103 கோடி, குஜராத் ரூ.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி ரூ.55 கோடி, மேற்கு வங்கம் ரூ.53  கோடி, பீகார் ரூ.51 கோடி, மத்திய பிரதேசம் ரூ.50 கோடி, ராஜஸ்தான் ரூ.50 கோடி, கர்நாடகா ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50% நிதியும், கொரோனா பாதிப்பு விகிதத்தை கணக்கில் கொண்டு 40  % நிதியும், அனைத்து மாநில அரசுகளுக்கும் 10% நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.