நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் இனி ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கிய 25 நாட்களுக்குப் பிறகு அடுத்த சிலிண்டரைப் பெறலாம் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என எந்த வேறுபாடும் இல்லாமல், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான கால இடைவெளி 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் வாங்கிய 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்குப் பிறகுமே அடுத்த சிலிண்டரை வாங்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது எல்பிஜி விநியோக நிலைமை சீரடைந்துள்ளதால், இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களும், நகர்ப்புறம்–கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி, 25 நாட்களுக்கு ஒருமுறை அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலிய அமைச்சகம், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் நகலையும் அமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.