மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்த போதிலும், காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி மருத்துவக் காப்பீட்டு (Mediclaim) கோரிக்கைகளை நிராகரித்து வருகின்றன. அப்படி நிராகரிக்கப்பட்ட ஒரு வழக்கில், நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இல்லை என்று கூறி, அவரது Google Maps Location History-யை காப்பீட்டு நிறுவனம் ஆதாரமாகக் காட்டியுள்ளது. இந்த விவகாரம் தற்போது டிஜிட்டல் தனியுரிமை தொடர்பான முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில்வாசாவைச் சேர்ந்த வல்லப் மோட்கா என்பவர், Go Digit General Insurance நிறுவனத்திடம் ரூ.6.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு பாலிசி வைத்திருந்தார். இவரது பாலிசி பிப்ரவரி 21, 2025 வரை செல்லுபடியாக இருந்தது.

இந்நிலையில், 2024 செப்டம்பர் மாதம் வைரஸ் நிமோனியா காரணமாக சில்வாசாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக (In-patient) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்காக மருத்துவச் செலவாக ரூ.48,251 செலவானது. இந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனத்திடம் மருத்துவக் காப்பீட்டு கோரிக்கையாக சமர்ப்பித்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கையை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது.

கோரிக்கையை நிராகரித்ததற்கான கடிதத்தில், மருத்துவமனை வழங்கிய பில்கள், மருத்துவ ஆவணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அந்த நிறுவனத்தின் விசாரணையாளர்கள், மோட்காவின் Google Maps Timeline (Location History) தகவல்களை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாட்களில், அந்த மருத்துவமனை அமைந்திருந்த இடத்தில் அவரது இருப்பிடம் பதிவாகவில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், அவர் உண்மையில் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றாரா என்ற சந்தேகத்தை காப்பீட்டு நிறுவனம் எழுப்பியது.

காப்பீட்டு நிறுவனத்திடம் பலமுறை தனது கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மோட்கா கேட்டுக்கொண்டார். ஆனால், நிறுவனம் தனது முடிவை மாற்றவில்லை.

இதையடுத்து, 2025 மார்ச் மாதம் அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார்.

அவரது வழக்கறிஞர், மருத்துவமனை மருத்துவர் வழங்கிய சான்றிதழை சமர்ப்பித்து, மோட்காவுக்கு தேவையான சிகிச்சை மருத்துவ மேற்பார்வையின் கீழ் முறையாக வழங்கப்பட்டதாக வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், காப்பீட்டு நிறுவனம் மோட்காவுக்கு ரூ.48,251 மருத்துவச் செலவை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

காப்பீட்டு நிறுவனம் தனது கோரிக்கையை நிராகரிப்பதற்கு தவறான தகவல்களை ஆதாரமாகக் காட்டியிருப்பதாக ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

Google Location History-க்கு சட்டப்பூர்வ மதிப்பு உள்ளதா?

இந்த வழக்கு தொடர்பாக மோட்காவின் வழக்கறிஞர் ஏ.என். தேசாய் கூறுகையில்:

“சில காப்பீட்டு நிறுவனங்களின் விசாரணையாளர்கள் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, அவர்களின் Google Location History-யை ரகசியமாகப் பார்ப்பதாக நாங்கள் அறிந்துள்ளோம்.”

ஒருவரது தனிப்பட்ட லொகேஷன் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பார்ப்பது சட்டவிரோதமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒருவர் தனது Location History அல்லது Data settings-ஐ முடக்கியிருக்கலாம் அல்லது நெட்வொர்க் பிரச்சினை காரணமாக அந்தத் தகவல் சரியாகப் பதிவாகாமல் இருக்கலாம்.

எனவே, Google Maps Timeline-ல் ஒரு குறிப்பிட்ட இடம் பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கொண்டு மட்டும், அந்த நபர் அங்கு செல்லவே இல்லை அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று முடிவு செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தில் அல்லது நுகர்வோர் ஆணையத்தில் சரிபார்க்கப்படாத Google Timeline தகவலுக்கு மட்டும் சட்டப்பூர்வ ஆதார மதிப்பு இருப்பதாகக் கருத முடியாது என்றும் வழக்கறிஞர் கூறினார்.

இந்த சம்பவம், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் லொகேஷன் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் பொதுமக்களின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.