ராஞ்சி: வேலையின்மையைக் கட்டுப்படுத்த ஜார்கண்ட் மாநிலமானது விரைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை நகர்ப்பகுதிகளில் தொடங்க உள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயால் வேலையின்மை அதிகரிப்பதை கையாள கேரளாவுக்கு பிறகு இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்ட 2வது மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது.
முக்யமந்திரி ஷ்ராமிக் யோஜ்னா என்பது இத்திட்டம் பெயராகும். இந்த திட்டத்தின் கீழ் சேருபவர்களுக்கு ஆண்டுதோறும் நகர்ப்புறங்களில் 100 நாட்கள் அதிகபட்ச வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும். இது ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சிந்தனை என்று கூறப்படுகிறது.
திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் வெளியிடப்படும் என்று மாநில நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர் வினய் குமார் சவுபி கூறினார்.
எந்தவொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை தேடுபவர்களுக்கு வேலை வழங்கத் தவறினால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் போல இதிலும் பணம் வழங்கப்படும்.
வேலையில்லாத ஒரு பதிவு செய்யப்பட்ட நபருக்கு முதல் 30 நாட்கள் வேலையின்மைக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் நான்கில் ஒரு பகுதியும், 2வது மாதத்தில் குறைந்தபட்ச ஊதியத்தில் பாதியும் கிடைக்கும்.
ஒரு தொழிலாளிக்கு 3வது மாதத்திலும் வேலை கிடைக்கவில்லை என்றால், அடிப்படை குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமான பணத்தை அவர் பெறுவார். குறைந்தபட்ச ஊதியம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சவுபி தெரிவித்தார்.
தற்போதுள்ள திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டங்களில் அவர்களுக்கு இடமளிக்க முடியாவிட்டால், பிரத்யேக திட்டங்கள் உருவாக்கப்படும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதற்காக தனி நிதி வழங்கப்படும். துப்புரவுப் பணிகள் முதல் மேம்பாட்டுத் திட்டங்கள் வரை நகர்ப்புறங்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
ஏழை என்றால் கிராமப்புற மக்கள் என்று ஒரு கருத்து இருந்தது. எனவே, கிராமப்புறங்களுக்கு ஏராளமான வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இருப்பினும், நகர்ப்புறங்களிலும் ஏழைகளின் ஒரு பகுதியும் உள்ளது, அவர்களுக்கு வேலை உத்தரவாதமும் தேவை என்று ஜார்க்கண்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹரிஷ்வர் தயால் கூறினார்.