கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் பாதிப்பு அடிப்படையில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.   இந்தியாவை விட அதிகமாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.   இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று வரை குஜராத் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 23,079 ஆகி உள்ளது.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 1449 ஆகி உள்ளது.    அகில இந்திய அளவில்கொரோனா பாதிப்பில் குஜராத் நான்காம் இடத்திலும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும் உள்ளது

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து குஜராத் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6285 ஆக உள்ளது.  இம்மாநிலத்தில் சராசரியாகத் தினசரி பாதிப்பு 483 ஆக உள்ளது.  இந்த மாதம் ஜூன் 5, ஜூன் 10 ஆகிய இரு தினங்களிலும் 510 பேருக்கும் ஜூன் 11 அன்று 513 பேருக்கும் ஜூன் 13 அன்று 517 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 390 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.  இதில் 258 பேர் அகமதாபாத், மற்றும் 88 பேர் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இதுவரை 15891 பேர் குணமடைந்துள்ளனர்.  குஜராத் மாநிலத்தில்  சிகிச்சை பெற்று வரும் 5739 பேரில் 61 பேருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் அகமதாபாத் நகரில் 26 பேர், சூரத் நகரில் 3 பேர், அம்ரேலியில் இருவர் பாவ்நகர் மற்றும் பதான் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிர் இழந்துள்ளனர்.

அகமதாபாத் நகரில் தொடர்ந்து 7 நாட்களாக 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  நேற்று மட்டும் 344 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நகரில் மொத்தம் 306 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1165 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நேற்று சூரத் நகரில் 59 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 2503 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். வடோதராவில் 40 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 1511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 2,83,623 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி மாநிலம் முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அகமதாபாத் நகரில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாதவரிடம் இருந்து 713 பேரிடம் இருந்து சுமார் ரூ.1.42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 10 முதல் 3208 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.6,41,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.