லண்டன்: இந்தாண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரோஜர் ஃபெடரர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரருக்கு தற்போது 38 வயதாகிறது. இவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றையர் பிரிவில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், முழங்கால் காயத்தின் பொருட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால், பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட சில தொடர்களில் பங்கேற்க முடியாமல் விலகினார்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, சில தொடர்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தாண்டில், இனிவரும் மாதங்களில் போட்டிகள் ஏதேனும் நடைபெற்றால், அவற்றில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றுள்ளார் அவர்.
அவர் கூறியுள்ளதாவது, “நான் துவங்கிய மறுவாழ்வுப் பயிற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உடற்தகுதி பெறவில்லை என்று கருதுகிறேன். எனவே, இந்த ஆண்டில் நடக்கவுள்ள போட்டிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அடுத்த சீசன் போட்டிகளில் பங்கேற்பேன்” என்றார்.