புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான மாநில அரசு மேலும் உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு கடந்த 3ந்தேதி உயர்த்தியது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.25-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50-ம் உயர்ந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே ஏப்ரல் 9ந்தேதி அன்று பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெட்ரோலுக்கு 21.15 சதவீதமும் டீசலுக்கு 17.15 சதவீதமும் வசூலிக்கப்பட்ட வாட் வரி மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோலுக்கு 22.15 சதவீதமும் டீசலுக்கு 18.15 சதவீதமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி மேலும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பணம் தேவைப்படுவதால், வரி உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ள மாநில அரசு, பெட்ரோல் வாரியானது 5.75 சதவீதமும் டீசலுக்கான வாட் வரி 3.65 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.