முசாபர்பூர் –
தன் தாய் பசியால் இறந்து விட்டார் என்று தெரியாமல் தாயின் சேலையை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் வீடியோ கான்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நான்கு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு லாரிகள் கால்நடையாக சைக்கிள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.இதன் மூலம் சாலை விபத்துக்கள், உடல்நலக்குறைவால் மரணம் என இதுவரையில் 196 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆமதாபாத்தில் இருந்து கதிஹார் செல்லும் சிறப்பு ரயில் முசாபர்பூர் அருகே செல்லும்போது, ரயிலில் அந்த பெண் இறந்துள்ளார். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு, ஆம்புலன்சில் அனுப்புவதற்காக முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, அவரது உடல் ஒரு துணியால் மூடப்பட்டிருந்த நிலையில் அவரது மகன், தனது தாய் தூங்கிக் கொண்டிருப்பதாக கருதி துணியைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் சொல்லியிருக்கிறான். இந்த காட்சி அங்கிருப்பவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.
பசி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று கூறப்படும் நிலையில், முசாபர்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மூன்று நாட்களாக பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தற்போது நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உறவினர்களில் ஒருவர், கடும் பசி மற்றும் வெயில் காரணமாகவே அவர் இறந்துவிட்டதாக கூறுகிறார். குழந்தை அம்மாவை எழுப்பும் அந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு ஆழ்ந்த அனுதாபத்தை பெற்று வருகிறது.