புதுடெல்லி: இனிவரும் நாட்களில், கிரிக்கெட்டில், பந்தைப் பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதை தடைசெய்யும் பரிந்துரை ஒரு இடைக்கால நடவடிக்கைதான் என்றுள்ளார் அனில் கும்ளே.
இவர் தலைமையில் ஐசிசி அமைத்த கமிட்டிதான் இந்தப் பரிந்துரையை செய்தது.
கும்ளே கூறியதாவது, “இதுவொரு இடைக்கால நடவடிக்கையே. இன்னும் சில மாதங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் நிலையில், நிலைமை சகஜமாகலாம். வீரர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எச்சிலுக்குப் பதில் வேறு செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த அனுமதித்தால், வேறுமாதிரியான பிரச்சினைகள் எழும். கிரிக்கெட்டின் வரலாற்றில் அவற்றையெல்லாம் பார்த்திருக்கிறோம்.
ஏனெனில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கேப்டவுன் சம்பவத்தையடுத்து, ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளோம்” என்றார் கும்ளே.