
மும்பை: கொரோனா ஊரடங்கால், தனது உடற்தகுதி சோதனை தள்ளிப்போவதாக கவலை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.
இந்த ஆண்டின் துவக்கத்தில், நியூசிலாந்து தொடரில் ஆடியபோது இவருக்கு இடதுகால் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விளையாட்டு தொடர்கள் ரத்துசெய்யப்பட்டன.
இதனால், ரோகித் ஷர்மா குணமடைந்தபோதும், உடல் தகுதியை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, “காயத்திலிருந்து மீண்டு விளையாட தயார் என்றபோதிலும், ஊரடங்கு காரணமாக என்னால் உடல்தகுதியை இன்னும் நிரூபிக்க முடியாத நிலை உள்ளது.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் உடல்தகுதி சோதனையில் பங்கேற்க உள்ளேன். அதில் தேறினால், பயிற்சியைத் தொடங்குவேன். தற்போது வீட்டிலேயே இருப்பதால் சக வீரர்களை மிஸ் செய்கிறேன்.
நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாய் இயங்குகிறோம். வீட்டில் உள்ள ஒரு சிறிய ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். உடல் எடை கூடுவதைத் தவிர்க்க, உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறேன். 50 மீ முதல் 100 மீ வரை ஓடும் வசதி இருப்பதால், ஓட்டப் பயிற்சியைக் கடைப்பிடிக்கிறேன்” என்றார்.
Patrikai.com official YouTube Channel