சென்னை

ரடங்கு தளர்வு மற்றும் வெயில் தாக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் மின்சாரத் தேவை  அதிகரித்துள்ளது.

பொதுவாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரிப்பால் மின்சாரத் தேவை அதிகரிக்கும்.  சராசரியாக மே மாதத்தில் மின்சாரத் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை விடவே அதிகரிக்கும்.  இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை மின்சார தேவை குறைவாக இருந்தது.  ஏப்ரல் மாத இறுதியில் 9750 மெகாவாட் மின்சார தேவை இருந்தது.

இந்த மாதம் 4 ஆம் தேதியில் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அமலாக்கப்பட்டு வருகின்றன.  அதைப் போல் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது.   மே மாதம் 4 ஆம் தேதி அன்று 11,294 மெகாவாட் மின் தேவை இருந்தது.  அதன் பிறகு அது 8 ஆம் தேதி 12834 மெகாவாட்டாக  அதிகரித்து 15 ஆம் தேதி 13419 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.  இதனால் நேற்று தமிழகத்தின் மின் தேவை 13,894 மெகாவாட் ஆனது.   சென்ற மாத இறுதியில் இருந்து இது சுமார் 4000 மெகாவாட் அதிகம் ஆகும்.   நாளை முதல் மேலும் பல தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதாலும் வெயிலின் தாக்கமும் இன்னும் அதிகரிக்கும் என்பதாலும் இது மேலும் அதிகரிக்கலாம்.