டாஸ்மாக்மூடல், குடும்ப வன்முறை.. கொரோனாவை தாண்டி கதறும் பெண்கள்


இந்த கொரோனா நோய் தொற்று தினம் தினமும் ஏதாவது புதிது புதிதான பிரச்சினைகளை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது.

“ஒரு நாளைக்கி 25 கால் வரை வருது சார் கண்ட்ரோல் ரூமுக்கு…” என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.  ஆம். இந்த கொரோனா காரணமான ஊரடங்கினால் பெண்களின் மீதான குடும்ப வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன காவல்துறையினரின் தகவல்கள்.

தனது குடிகார கணவனால் எப்போதோ சில முறை துன்புறுத்தப்பட்ட திருமதி. சாந்தி, இப்போது டாஸ்மாக் மூடப்பட்டு சரக்கு ஏதும் கிடைக்காத நிலையில் தனது கணவனால் 24 மணி நேரமும்  சித்ரவதைக்கு உள்ளானதால், பொறுமையிழந்து கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டிருக்கிறார்.

இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவை.  ஐடி துறையினர் மற்றும் பெரிய பெரிய பிசினெஸ்மேன்களின் மனைவிகளிடமிருந்தும் இது போன்ற குடும்ப வன்முறை குறித்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும், அவர்கள் யாரும் புகார் தர விரும்புவதில்லை.  சில பெண்கள் வெறுத்துப் போய் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைத்தாலும், சரியான தகவல்கள் தராமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறனர்.

அழைப்பு வந்தவுடன், காவல்துறை ரோந்து வாகனம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  சில இடங்களில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறனர்.  சில இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் குடும்ப பிரச்சினை என்பதால் கணவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறனர்.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஊரடங்கு அமலினால் போக்குவரத்து தடையுள்ள இந்த சூழலில்,  தனது தாய் வீட்டிற்கோ, உறவினர் மற்றும் தெரிந்த நண்பர்கள் வீட்டிற்கோ தற்காலிகமாகக் கூட செல்ல முடிவதில்லை பாதிக்கப்பட்ட பெண்களால்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கான  காவல்துறை கூடுதல் இயக்குநர்.எம். ரவி அவர்கள் கூறும்போது, “பாதிப்பு ஏற்படும் என்று அறியப்பட்ட பகுதிகளைக் களத்திலுள்ள சம்பந்தப்பட்ட காவலர்கள் மூலம் கண்காணித்தே வருகிறோம்.  ஆனால் பெரும்பாலான ஆண்கள் இது போன்ற கண்காணிப்புகளை விரும்புவதில்லை.  அந்த கோபத்தினையும் மீண்டும் அந்த பெண்களின் மீதே தான் காட்டுகின்றனர் இவர்கள்” என்கிறார் வருத்தத்துடன்.

காவல்துறையினரின் தகவலின்படி இந்த வன்முறைகள் அனைத்திற்கும் காரணங்களாக அறியப்பட்டவற்றில் முக்கியமானது டாஸ்மாக் சரக்கு தான்.  இதனைத் தொடர்ந்து, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, குழந்தைகளைப் பராமரிப்பது, தம்பதியினர் ஒருவருடைய மொபைலை இன்னொருவர் ஆராய்வது,  டிவி சேனல்களை அடிக்கடி மாற்றுவது மற்றும் அதீத செக்ஸ் தேவைகள் ஆகியவையும் காரணங்களாக அறியப்பட்டுள்ளது.

சினேகா அமைப்பின் நிறுவனர் டாக்டர் லெட்சுமி விஜயகுமார், “பொதுவா இது போன்ற நெருக்கடியான சூழலில் ஒருவருக்கொருவர் அவரவருக்கான இடத்தினை விட்டுத்தருவது முக்கியம்.  அதிலும் குழந்தைகளும் உடனிருப்பதால், ஏதாவது ஒரு சிறு மனஸ்தாபம் என்றாலும் கூட இருவரும் தனித்தனியாக விலகி இருப்பது மிக மிக அவசியம்” என்கிறார்.

இந்த கொரோனா முடிவுக்கு வருவதற்குள் இன்னமும் என்னென்ன விசித்திர பிரச்சினைகளையெல்லாம் தந்து விட்டுச் செல்லப்போகிறதோ என்று தெரியவில்லை.  தற்போதைய சூழலில் குடும்பத்திலுள்ளோர் பொறுமை காப்பதும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் மிக மிக அவசியமானவையாகும்.

– லட்சுமி பிரியா