சென்னை: தொழில்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியால், செய்தித்தாள்களுக்கான விளம்பரக் கட்டணம் மற்றும் வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது இந்திய செய்தித்தாள்கள் அமைப்பான ஐஎன்எஸ்.
அந்த அமைப்பின் சார்பில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வணிகம் மற்றும் தொழிற்துறைகளின் பாதிப்பால் செய்தித்தாள்களுக்கான விளம்பரங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
செய்தித்தாள்களுக்கான அச்சு மற்றும் தயாரிப்பு செலவுகளில் மிகச் சிறிய பங்கை மட்டுமே வாசகர்களிடம் விலையாக பெறுகிறோம். பெரும்பாலான செலவுகள் விளம்பரங்கள் வழியாகவே சமாளிக்கப்படுகின்றன. தற்போது விளம்பர வருவாய் மிகவும் குறைந்து விட்டதால் பல சிறிய நடுத்தர செய்தித்தாள்கள் வெளியீடுகளை நிறுத்தி விட்டன.
பெரிய நிறுவனங்கள் பக்கங்களை குறைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான நிலையை கருதி செய்தித்தாள் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும்.
செய்தி அச்சிடும் தாள்களுக்கான 5% சுங்க வரியை நீக்க வேண்டும். செய்தித்தாள் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வரி விலக்கு தர வேண்டும். அரசின் சார்பிலான விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50% உயர்த்த வேண்டும். செய்தித்தாள்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டை 100% அதிகரிக்க வேண்டும்.
மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள விளம்பரக் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விளம்பர கட்டண நிலுவைத் தொகையை மாநில அரசுகளும் உடனடியாக வழங்க அறிவுறுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலைக்கேற்ப இந்த சலுகைகளை மத்திய அரசு வழங்கி செய்தி நிறுவனங்களின் இழப்புகளை சமாளிக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.