விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 2வதாக ஒருவர் பலியானார்.
அவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். ஏற்கெனவே, மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த அவர், கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட் – 19 பாசிட்டிவ் 51 வயது ஆண், நேற்று இரவு மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான அவரது உடல் விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்.