திருப்பூர் :

 

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் உலகநாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தமிழக அரசு கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளிப்பது, கிராமங்களில் உள்ள ஆதரவற்ற வயதானவர்களுக்கு ஒன்றியம் தோறும் உணவு சமைத்து ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கையாண்டுவருகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள சந்தை பகுதிகளுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த சந்தைகளை பெரிய மைதானங்களில் மாற்றியும், உள்ளே வந்து செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள சந்தைக்கு வந்து செல்லும் மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தி அவர்கள் செல்லும் வழியில் கிருமி நாசினி தெளித்து அதன் வழியே அனைவரும் செல்லும் வண்ணம் அமைத்திருக்கிறது திருப்பூர் நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1312 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதும், ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிட தக்கது.