சென்னை:
தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்களையும், ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில், அரசின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 67 ஆக இருந்த நிலையில், இன்று புதியதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 7 பேர்களில் ஒருவரான 43வயது மதிக்கத்தக்க நபர் திருவனந்தபுரத்தில் இருந்து திரும்பியதாகவும், அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. அவருடன் சேர்ந்து பணியாற்றி வந்த 28 வயது நபர் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் 3 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மற்ற 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களும் சமீபத்தில் டெல்லி சென்று திரும்பி உள்ளது தெரிய வந்துள்ளது.