கொரோனா வைரஸ் நோயால் சாமானியன் முதல் சகலமானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பல்வேறு வகையினில் அரசின் உதவிகரத்தை நாடும் நிலையில்.
விமான போக்குவரத்து நிறுவனங்கள் இந்த ஆண்டு 252 பில்லியன் டாலர் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (IATA) தெரிவித்துள்ளது, இந்த இழப்பை ஈடுசெய்ய போதிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கினால் மட்டுமே நிலைமை சீரடையும் என்று கூறுகிறது.
விமான நிறுவனங்கள் பல்வேறு சர்வதேச முனையங்களுக்கு செல்லமுடியாமல் முடங்கிப்போனதே இந்த இழப்புக்கு காரணம், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19,000 கோடி இழப்பு ஏற்படும் என்ற இந்த புதிய அறிவிப்பு கடந்த இருவரங்களுக்கு முன் வெளியான தகவலை விட இரு மடங்கு அதிக தொகையாகும்.
சீனாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருந்தாலும், ஆசியா உள்ளிட்ட சர்வதேச வழித்தடங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடிக்கு முன்னர் பெரும்பாலான விமான நிறுவனங்கள் குறைந்த கையிருப்புக்களில் இயங்கின. முக்கிய சர்வதேச விமான வழித்தடங்களை திடீரென மூடுவது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, நல்ல நிதி நிலையில் இருந்த விமான நிறுவனங்கள் கூட பாதிப்புக் குள்ளாகியிருக்கிறது, என்று IATA தலைமை பொருளாதார நிபுணர் பிரையன் பியர்ஸ் கூறினார்.
IATA டைரக்டர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக், அரசாங்கங்கள் விரைவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் இந்த நிலைமை நீடித்தால் பல விமான நிறுவனங்கள் பணமில்லாமல் திவாலாகிவிடும் என்றும் தெரிவித்தார்.