மணிலா :

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை டோக்யோவிற்கு ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று புறப்பட்ட லயன் ஏர் விமானம், திடீரென ​​தீப்பிடித்தது, அதில் இருந்த ஒரு அமெரிக்கர் ஒரு கனடா நாட்டை சேர்ந்தவர் உள்ளிட்ட மொத்தம் எட்டு பேரும் கொல்லப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் கார்டன், விமானத்தில் இருந்த எட்டு பேரில் விமான மருத்துவர், செவிலியர், மருத்துவர், மூன்று விமானக் குழுவினர், ஒரு நோயாளி மற்றும் நோயாளியின் நண்பர் ஒருவர் இருந்ததாக கூறினார்.

“விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து கிளம்பும்போது விமானம் தீப்பிடித்து வெடித்தது” என்று கோர்டன் ட்விட்டரில் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு ஏழு பணியாளர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் கொண்ட தீயணைப்பு வண்டி அனுப்பப்பட்டதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் தனது அறிக்கையில் ஓடுபாதை மூடப்பட்டதாகவும் விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் தற்போது குறைந்தது 1,418 பேருக்கு கொரோனா வைரஸ் (COVID-19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 71 இறப்புகள் நிகழ்ந்துள்ளது.