மெல்போர்ன்: பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, 85 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, முதன்முறையாக கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கனவுகள் அனைத்தும் தகர்ந்தன.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 184 ரன்களைக் குவித்தது. ஆனால், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே சறுக்கியது.
எந்தத் திட்டமும் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் களமிறங்கியது போல் ஆடியது. பவுலிங்தான் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால், பேட்டிங் படுமோசம்.
18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 30 ரன்களுக்கு 4வது விக்கெட்டையும், 58 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும் பறிகொடுத்தது.
மொத்தமாக 185 ரன்களை எட்ட வேண்டுமென்ற நிலையில், மூன்று இலக்க எண்ணிக்கையைக்கூட எட்டாமல், 99 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, ஏற்கனவே 4 முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவிடம் மிக எளிதாக சரணடைந்துவிட்டது.
ஆஸ்திரேலியா சார்பாக மீகன் ஸ்கஃப் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜொனாஸன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், லீக் போட்டியில் தன்னை வீழ்த்திய இந்தியாவை பழிதீர்த்ததுடன், 5வது முறையாக பெண்கள் டி-20 உலகக்கோப்பையையும் வென்றது ஆஸ்திரேலிய அணி.