சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வில் 60% மாணாக்கர்கள் தேர்ச்சி பெறவில்லை. பயிற்சியளிக்கப்படாத பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரித்ததாலேயே, மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 150க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் தன்னாட்சியுடன் செயல்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில், பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்ற பணிகளை அந்தந்தக் கல்லுாரி நிர்வாகங்களே மேற்கொள்கின்றன.

அதேசமயம், தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில், 40%க்கும் குறைவான மாணாக்கர்களே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 60% மாணாக்கர்கள் தேர்ச்சி பெறவில்லை. குறிப்பாக, ‘கம்ப்யூட்டர் கோடிங்’ தொடர்பான ‘பைத்தான்’ மற்றும் கணித பாடங்களில் பெரும்பாலான மாணாக்கர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது.

தன்னாட்சி பெறாத கல்லூரிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் மிகவும் கடினமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சரியாக பயிற்சி அளிக்கப்படாத பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெறுகின்றன. இதனால்தான் இந்த நிலை என்று குற்றம் சாட்டப்படுகிறது பெற்றோர்கள் தரப்பில்.