டெல்லி:

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை  இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அப்போது அதிமுகவில் இருந்து விலகி தனி அணியாக இருந்த தற்போதைய  துணை  முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக  வாக்களித்திருந்தனர்.

கட்சி கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உள்பட  11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது.

இதையடுத்து  வழக்கை விரைந்த விசாரிக்கும்படி, தலை நீதிபதியிடம் திமுக வழக்கறிஞர்கள்  முறையிட்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கு இன்று  (4ஆம் தேதி ) விசாரணைக்கு வருவதாக பட்டியலிடப்பட்டு உள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த  வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.