ஹாமில்டன்: கிரிக்கெட்டில், தொடக்க வீரராக 10,000 ரன்களை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் ரோகித் சர்மா.
இந்திய அணி நியூசிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் 3வது போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 179 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். ஒரு தொடக்க வீரராக, சர்வதேச கிரிக்கெட்டில், 10,000 ரன்களை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.
முதல் இன்னிங்சின் 6வது ஓவரில் சிக்சர் அடித்த போது அவர் இந்த சாதனையை படைத்தார். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆவர்.
2007 ஆம் ஆண்டில் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அறிமுகமாகி பின்னர் துணை கேப்டனாக உயர்ந்தார். 2013 முதல் தொடக்க ஆட்டக்காரராக வலம் வருகிறார். சிறப்பான ஆட்டத்தால் அந்த இடத்தில் நீடித்து வருகிறார்.
தொடக்க வீரராக, ஒருநாள் போட்டிகளில், 140 போட்டிகளில் 7148 ரன்கள் எடுத்துள்ளார். 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் (264) அதிக தனிநபர் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்தவர்.