சென்னை:
சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரைகள் உண்டாவதாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரைகளில் முன்பு இல்லாத அளவில் பனி போன்ற நுரை காணப்படுவதால் மாநில அரசு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (டி.என்.பி.சி.பி) இது குறித்து அறிக்கையைக் கேட்டுள்ளது, வாரியம் இதற்காக மாதிரிகளைச் சேகரித்து விரிவான பகுப்பாய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் சட்டவிரோதமாக அடையாறு ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் சேர்ப்பதால் ‘நச்சு’ பாசி பூக்கத் தொடங்கி உள்ளதாகவும். இதன் விளைவாக, அலை நடவடிக்கையின் கீழ் நுரைக்கும் பண்புகளைக் கொண்ட பாஸ்பேட்டுகள் குவிந்தன எனவும் தெரிய வந்தது..
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மாலை, இரு கடல் நீர் மாதிரிகளைச் சேகரித்தனர். ஒரு மாதிரி அடையாறு ஆற்றின் சங்கம இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கடலுக்குள் சேகரிக்கப்பட்டு, மற்றொன்று 1 கி.மீ தூரத்தில் சேகரிக்கப்பட்டது. ஆயினும் சென்னை நகரக் கடற்கரைகளில் நுரை உண்டாவது தொடர்ந்ததால் அக்டோபர் 3 ஆம் தேதி இந்த சோதனை மீண்டும் நடத்தப்பட்டது.
இந்த நான்கு மாதிரிகளின் சோதனை முடிவுகளும் நீரில் 0.672 மிகி /லிட்டர் என்னும் உயர் பாஸ்பேட் உள்ளதைக் குறிக்கின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி ஒருவர், “எடுக்கப்பட்ட மாதிரிகளில் கழிவுநீர் வாசனை அதிகமாகக் காணப்பட்டது. சோப் மற்றும் எண்ணெய்களிலிருந்து அகிக அளவு பாஸ்பேட்டுகளைக் கொண்ட கழிவுநீர் கலக்கப்பட்டதே இந்த நுரைகளுக்குக் காரணம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜோ கே கிழக்குடன், ”வீடுகளில் உள்ள கழிவுநீர் மற்றும் தொழில்துறை கழிவுகளை அடையாறு ஆற்றில் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றுவதாக மாசுக் கட்டுப்பாட்டு அறிக்கை முடிவுகள் நிரூபிக்கின்றன. அத்துடன் திரவ சோப், விலங்குகளின் கழிவுகள், உரங்கள் மற்றும் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் அதிக பாஸ்பேட்டுகள் உருவாகின்றன.
அத்துடன் சமீபத்தில் பெய்த கடும் மழையால் பாஸ்பரஸால் நிரம்பிய வண்டல் மற்றும் கரிமப் பொருட்கள் ஆற்றில் கலந்துள்ளன. இவை திடீரென பாசி பூக்க வழிவகுக்கிறது. இதனால் நைட்ரஜன் மற்றும் அம்மோனியாவுடன் இணைந்து, அது நுரையை வெளியிடுகிறது, ”என கூறியுள்ளார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த நீரில் உள்ள கனரக உலோகங்களைச் சோதிக்க வேண்டாம் என்று கூறியது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்வேதா நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார். அவர், “விவசாய நிலங்களில் இருந்து உரங்கள் மூலம் பாஸ்பேட்டுக்கள் நீர்வழிகள் மார்க்கமாகக் கடலுக்குள் சேருகின்றன என்ற சந்தேகம் உள்ளது, ஆகையால் கனரக உலோகங்களையும் வாரியம் பரிசோதித்திருக்க வேண்டும், ஏனெனில் அவை கடுமையான சுகாதார ஆபத்து மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.”எனத் தெரிவித்துள்ளார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் , :கனரக உலோகங்களுக்கும் நுரை உண்டாவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆயினும் வாரியம் கனரக உலோகங்களை விரைவில் சோதிக்க உள்ளது இந்த சோதனை மூலம் எந்த வகையான கழிவுகளை அப்ஸ்ட்ரீமில் வெளியிடுகிறது என்பதைக் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.