நியூடெல்லி: சர்வதேச அரங்கில் தன்னை அறிவித்ததிலிருந்து இந்தியாவின் பிரதான பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராத் கோஹ்லி, சமீபத்தில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார்.
2008 ஆம் ஆண்டில் அவர் சர்வதேச அளவில் அறிமுகமானபோது, கோஹ்லி ஒரு சதைப்பற்றுள்ள முகம் கொண்ட இளைஞன். இருப்பினும், அந்த நாட்கள் அவருக்குப் பின்னால் வெகுதூரத்தில் உள்ளன, ஏனெனில் வியக்கத்தக்க வகையில் நடந்த அவரது தேக ஆரோக்கிய மாற்றம் அனைவரும் கண்கூடாகப் பார்த்ததே.
வயது ஏற ஏற அவர் மேலும் கூடுதல் தேக ஆரோக்கியத்தோடு திகழ்வது மட்டுமல்லாமல், அவர் அணிக்குள்ளேயே ஒரு ஃபிட்னெஸ் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார், மேலும், ஒவ்வொரு உறுப்பினரும் அதிக சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் மாற ஊக்கமளித்துள்ளார்.
கோஹ்லி கடந்த ஆண்டு சைவ உணவுக்கு மாறியிருந்தார். 30 வயதாகும் கோஹ்லி, சைவ உணவு உண்பது தனது தேக ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெரிதும் உதவுகிறது என்று நம்புகிறார்.
புதன்கிழமை அன்று நெட்ஃபிளிக்ஸ் இல் தாவர உணவு உண்பது, விளையாட்டு வீரர்களுக்கு எந்தளவுக்கு நன்மை பயக்கிறது என்கிற கருத்தை மையமாகக் கொண்ட கேம் சேஞ்சர்ஸ் என்ற ஆவணப் படத்தைப்பார்த்த கோஹ்லி, தனது உணர்வுகளை ட்விட்டரில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருந்தார்:
“நெட்ஃபிளிக்ஸ் இல் கேம் செஞ்சர்ஸ் பார்த்தேன். ஒரு சைவ விளையாட்டு வீரனாக இருப்பதனால், உணவு சம்பந்தமாக இந்த ஆண்டுகளில் நான் நம்பியது ஒரு கட்டுக்கதை என்று உணர்ந்தேன். என்ன ஒரு அற்புதமான ஆவணப்படம்“ மற்றும் “ஆம், நான் சைவமாக மாறிய பிறகு, என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு சிறப்பாக ஒருபோதும் உணர்ந்ததில்லை.“ என்று கூறியிருந்தார்.