பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி! உறுப்பினர்கள் வாழ்த்து

Must read

மும்பை:

பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பிசிசிஐ உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று முப்பையில் நடைபெற்றது. இதில்,  பிசிசிஐ நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி,  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம், துணை தலைவராக மஹிம் வர்மாவும் பொறுப்பேற்றார்கள்.

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பதை தொடர்ந்து, உச்சநீதி மன்ற உத்தரவுபடி,  கடந்த 33 மாதங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  பணிகளை கவனித்து வந்த வினோத்ராய் தலையிலான நிர்வாக கமிட்டியின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, “என்னை நம்புங்கள், இனிமேல் இந்திய கிரிக்கெட்டை இன்னும் அதிக ஆர்வத்துடன் உலகம் பார்த்துக் கொண்டே இருக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article