சென்னை:
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக எழும்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத அளவுக்கு பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான் என்று கூறியவர், பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே காய்ச்சல் பாதிப்பை முழுமையாக தடுக்க முடியும் என்றார்.
இப்போது வரை தமிழகத்தில் 3,900 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக அரசு மருத்துவர்கள் குழு உள்ளனர் என்று கூறியவர், இந்திய அளவில் தமிழகத்தில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு என்றார்.
காய்ச்சல் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என்றும், டெங்கு குறித்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி நடவடிககை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
[youtube-feed feed=1]