திருவனந்தபுரம்:
மதத்தின் பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் பாஜக ஆளும் மாநிலத்தில் வேண்டுமென்றால் தப்பிக்கலாம், கேரளாவில் தப்பிக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
கேரள மாநிலத்தில், கடவுளின் பெயரை யாரும் உச்சரிக்க முடியாதது என்றும், மக்கள் மீது பொய்யான வழக்குகள் சுமத்தப்படுகின்றன என்றும் மாநில அரசு மீது பிரதமர் மோடி சமீபத்தில் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இதுகுறித்து கூறிய முதல்வர் பினராயி விஜயன், “மதத்தின் பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத்தகைய குற்றவாளிகள் பாஜக ஆளும் மாநிலங்களில் தப்பிக்கக்கூடும், ஆனால் கேரளாவில் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் ”என்று கேரள முதல்வர் மோடிக்கு பதில் கூறினார்.
மேலும், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் பிரதமர் தவறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கூறியவர், அது அவரது அந்தஸ்துக்கு தகுதியற்றது என்றும் கூறினார். கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு கடவுளின் பெயரை அழைப்பதில் எந்த தொடர்பும் இல்லை என்று பினராயி விஜயன் தெளிவு படுத்தியவர், மதத்தின் பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள மக்களுக்கு உண்மை தெரியும் என்றும், மோடியின் இத்தகைய கூற்றுகள் தங்கள் பிரதமரைப் பற்றி மக்களின் மனதில் ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்காது என்றும் பினராயி விஜயன் கூறினார்.
இந்தியாவின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரள மாநிலம், இருப்பதால், நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் பாஜக தங்களுக்கு ஆலோசனை சொல்லத் தேவையில்லை என்றும் காட்டமாக கூறினார்.