கோழிக்கோடு: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மக்களுக்கான அவசரகால பிரேதப் பரிசோதனை கூடமாக செயல்பட்டு வருகிறது ஒரு மசூதி.
மலப்புரம் மாவட்டத்தின் பொதுக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அந்த மசூதி. நிலச்சரிவு ஏற்பட்ட கவலப்பாரா கிராமத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த மசூதி.
கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றை அருகிலுள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில் மொத்தம் 2 மணிநேரத்திற்கும் அதிகமாக தேவைப்படும். மேலும், அதேபகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திலும் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான இடவசதி கிடையாது.
எனவே, என்ன செய்வதென்று உடனடியாக முடிவுசெய்ய முடியாமல் மாவட்ட நிர்வாகம் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்த மசூதிக்கு பொறுப்பானவர்கள் தங்களின் இடத்தை வழங்க முன்வந்தார்கள். மேலும், தங்களால் இயன்ற வழிகளில் உதவ முன்வந்தார்கள்.
அந்த மசூதியின் பிரார்த்தனை அறைதான் முதன்மை பரிசோதனை அறையாக செயல்படுகிறது. இறந்துபோன முஸ்லீம்களின் உடலை சுத்தப்படுத்த மசூதியால் பயன்படுத்தப்படும் மெத்தை, தற்போது பிரேதப் பரிசோதனை பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
நெருக்கடியான நேரத்தில், பிரேதப் பரிசோதனை போன்ற சென்ஸிடிவ்வான ஒரு பணிக்கு தங்களின் இடத்தை தந்து உதவிய அந்த முஸ்லீம்களின் மனிதாபிமானத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.