சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் தனபால் தெரிவித்து உள்ளதார். வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அறிவிப்பு காரணமாக, 10 நாட்கள் முன்னதாகவே கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ந்தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியாற்றும் வகையில் சட்டசபை கூட்டத்தொடர் முன்கூட்டிய முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பத்து நாட்கள் முன்னதாக 20-ம் தேதியே நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 20ந்தேதியுடன் முடிவடைவதாக சபாநாகர் அறிவித்து உள்ளதார்.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதும், மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போதும், மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், முன்கூட்டியே முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.