சென்னை
பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள 66 குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடிக்க உள்ளது.
சென்னை நகரில் ஓடும் கூவம் ஆறு, அடையார் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றின் கரைகளில் ஏராளமானோர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடி புகுந்துள்ளனர். இதனால் நீர் நிலைகள் கடும் மாசடைகின்றன. வெள்ள காலத்தில் வெள்ள நீர் இந்த ஆறு மற்றும் கால்வாய் வழியாக கடலுக்கு செல்ல முடியாததால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அரசு இந்த பகுதியில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு குடி பெயர வைக்கின்றனர். ஆயினும் இந்த பகுதிகளில் அதே மக்கள் மீண்டும் குடியேறி விடுகின்றனர். அத்துடன் புதியதாகவும் பலர் குடி ஏறி முன்பை விட அதிகம் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக நகரின் மையப்பகுதிகளான திருவல்லிகேணி, அடையாறு போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த நீர் நிலைகளின் கரைப் பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி அவர்களை வேறு இடங்களுக்கு குடி மாற்ற நடவடிக்கை எடுத்தனர். ஆனால் தற்போது இந்த பகுதிகளில் குடியிருக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எனவே புதிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இவ்வாறு புதிய ஆக்கிரமிப்புக்கள் உண்டாவதை தடை செய்ய அரசு முடிவு செய்தது.
அதை ஒட்டி உடனடியாக பக்கிங்காம் கால்வாய் கரை ஓரம் உள்ள 66 குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடிக்க உள்ளது. இந்த குடிசை பகுதிகளில் சுமார் 26,300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு குடிசைகளை இடித்து மேலும் மக்கள் குடி புகாமல் தடுக்கும் நடவடிக்கிகளில் சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளது.