சென்னை
சென்னை விமானநிலைய சுங்க சோதனையில் ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் விமானம் நேற்று வந்தது. சுங்க அதிகாரிகளுக்கு அந்த விமானத்தில் கடத்தல் தங்கம் உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. அதை ஒட்டி விமானத்தை அதிகாரிகள் சோதனை இட்டனர். சோதனையில் ஒரு இருக்கையின் கீழே ஒரு வெள்ளை துணிப்பை மறைத்து வைத்துள்ளது கண்டறியப்பட்டது
அந்த பையில் 24 காரட் தங்கத்தினால் செய்யப்பட்ட 8 வளையல்களும், 4 சங்கிலிகளும் மறைந்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 42 லட்சமாகும். அந்த இருக்கையில் பயணம் செய்த திருவாரூரை சேர்ந்த 56 வயதாகும் அப்துல் ரகுமான் பஷீர் அகமது என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ஷார்ஜாவில் இருந்து இந்த நகைகளை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதை போலவே சென்னையை சேர்ந்த 27 வயதாகும் அப்துல் பக்ரி என்னும் இளைஞர் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமனத்தில் வந்து இறங்கினார். அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் முழு சோதனை செய்தனர். அவர் தனது உடையில் மறைத்து வைத்திருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.