ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை சேர்ந்தவர் சரவணன். பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினரான சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ஜான்சி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஜான்சியை பார்ப்பதற்காக சென்னப்ப நாயக்கனூருக்கு சரவணன் சென்றார். அப்போது வீட்டில் ஜான்சியும், அவரது பெற்றோரும் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சரவணனுக்கு, ஜான்சி லெமன் ஜூஸ் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் சென்று தனியாக பேசலாம் என்று ஜான்சி, சரவணனை அழைத்திருக்கிறார். அங்கு அவருடன் பேசிவிட்டு, ஜான்சி வீட்டிற்குள் சென்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே, சரவணன் ரத்தக் காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், சரவணனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சரவணன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, இன்று காலை அவர் வீடு திரும்பினார்.
இதுகுறித்து சரவணன் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை பொறுப்பு காவல் ஆய்வாளர் குமரன், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜான்சியிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது ஏற்கனவே ஜான்சிக்கு காதலர் ஒருவர் இருந்ததும், அது அவரின் குடும்பத்திற்கு தெரியாது என்றும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிந்த காவலர்கள், ஜான்சியை கைது செய்து சிறையிலடைத்தனர்.