சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக டில்லி மக்களவைக்கு செல்லும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் ரவிக்குமார் ஆகியோர், நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து எடுத்த புகைப்படங்களை, ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களில் போட்டியிட்டது.

விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட  விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால்,  சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,  சுயேச்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வாகை சூடினார். இவர்கள் விரைவில் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தை சுற்றிப்பார்த்தனர். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து செல்ஃபி எடுத்து, அதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளனர்.