டில்லி
இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவைப் பெற்றா ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் மூலம் அந்த தீவிரவாத இயக்க முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஒட்டி எல்லை தாண்டி வந்த பாக் விமானப்படையை துரத்திச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தத்தினால் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆன உறவு இதன் மூலம் மேலும் வலுவிழந்தது. இரு நாட்டு பிரதமர்களும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று மோடி மீண்டும் பிரதமராக வரும் 30 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது மோடிக்கு இம்ரான் கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,”மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தெற்கு ஆசியாவில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஏற்பட நமது இரு நாடுகளும் சேர்ந்து பாடுபட வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்த மோடி . “நமது பகுதியில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஏற்பட வன்முறை மற்றும் தீவிரவாதம் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும். அதுவே தாங்கள் எடுக்க வேண்டிய தற்போதைய முதல் நடவடிக்கை ஆகும்.” என பதில் அளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு பிரதமர்களும் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை ஆகும். சுமார் 3 நிமிடம் இந்த பேச்சு நடந்துள்ளது. மோடி வெற்றி அடைந்த உடன் இம்ரான் கான் தனது டிவிட்டரில் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார். அதற்கு மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.
[youtube-feed feed=1]