மனு, உத்திரப் பிரதேசம்
நேற்று முன் தினம் கொல்கத்தாவில் உடைக்கப்பட்ட வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யா சாகருக்கு பிரம்மாண்டமான சிலை கொல்கத்தாவில் அமைக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று முன் தினம் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஒரு சாலைப்பேரணியை நடத்தினார். அந்த பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பல தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தன.
இந்த கலவரத்தில் வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை திருணாமுல் காங்கிரஸ் உடைத்ததாக பாஜக கூறியது. பாஜக தொண்டர்கள் உடைத்ததாக திருணாமுல் காங்கிரஸ் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தது. வன்முறையின் காரணமாக மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை இன்று முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பிரதமர் மோடி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மனு என்னும் இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், “பாஜக தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பிரசாரக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கலவரம் செய்தனர். இதை நாடே அறியும்.
வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உடைத்துள்ளனர். ஆனால் பாஜக உடைத்ததாக கூறி வருகின்றனர். வித்யாசாகர் மதிக்கப்பட வேண்டியவர். நாங்கள் கொல்கத்தாவில் அதே இடத்தில் அவருடைய பிரம்மாண்டாமான ஐம்பொன் சிலையை அமைக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளா.ர்