ராகத், பீகார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிக்க போவதாக ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியும் ஒன்றாகும்.   தற்போது இந்தக் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.   நடைபெறும் மக்களவை தேர்தலில் இந்த கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா கராகத் மற்றும் உஜ்தார்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

குஷ்வாகா சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.  அதில் அவர், “நான் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் எனக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது என எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு இரு தொகுதிகளிலும் பாடம் புகட்டுவேன்.  எனக்கு எதிராக உஜ்ஜவாரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நித்யானந்த் ராய் மற்றும் கராகத் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் மகாபலி சிங் இருவரையும் நான் தோற்கடிப்பேன்.

தற்போது எதிர்கட்சிகள் கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.   ஆனால் எங்கள் கட்சியை  பொறுத்தவரை நாங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிக்க உள்ளோம்.  இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது.  எங்களுடைய மகாகட்பந்தன் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும் அளவுக்கு மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.

பாஜக வெற்றி பெற்றாலும் நாங்கள் கூட்டணி மாற மாட்டோம்.   ஆனால் பாஜக வெற்றி பெறாது.  இதுவரை நடந்த ஆறு கட்ட வாக்குப்பதிவில் தாம் தோற்று விடுவோம் என்பதை நிதிஷ் குமார் தெரிந்துக் கொண்டுள்ளார்.   அதனால் தான் அவர் தற்போது பீகாருக்கு விசேஷ அந்தஸ்து கோருகிறார்.   இதனால் வாக்காளர்கள் ஏமாற மாட்டார்கள்.

பாஜக அரசு கொண்டு வந்த 10% இட ஒதுக்கீடு என்பது வெறும் மோசடி என்பதை இளைஞர்கள் அறிந்துக் கொண்டுள்ளனர்.    இதன் மூலம் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது.  இது மக்களை ஏமாற்றும் திட்டமாகும்

இதைப் போலவே மோடியின் பாலகோட் தாக்குதலில் மேக மூட்டத்தில் ராடார் வேலை செய்யாது என்பது நகைச்சுவயான கருத்தாகும்.   அத்துடன் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மோடி விமர்சித்தது மிகவும் மட்டமானதாகும்” என தெரிவித்துள்ளார்.