டில்லி

ண்டிகோ விமான நிறுவன இரு பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரபல இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் காங்குவால் ஆகிய இருவரும் சேர்த்து தொடங்கினர்.   கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான சேவை நிறுவனம் குறைந்த கட்டணம் வசூலித்ததால் நன்கு வளர்ச்சி அடைந்தது.   இதில் ராகுல் பாட்டியாவுக்கு 38% பங்கும் ராகேஷ் காங்குவாலுக்கு 37% பங்கும் உள்ளன.

ராகேஷ் காங்குவால் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் விமான சேவை நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார்.  அவர் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கி அதன் பிறகு யுஎஸ் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக பணி புரிந்தவர் ஆவார்.    தற்போது இந்நிறுவனம் விமான சேவையில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் தலைவர் அதித்யா கோஷ் பதவி விலகினார்.  அதன் பிறகு இந்நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் சஞ்சய் குமார் ராஜினாமா செய்தார்.  இதை ஒட்டி ரோனோஜாய் தத்தா நிறுவன தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.   இவர் காங்குவால் உடன் யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர் ஆவார்.

ராகுல் பாட்டியா இந்த நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனத்தை தனது கைக்குள் எடுத்து வர காங்குவால் இந்த நியமனம் செய்துள்ளதாகவும் எண்ணியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.   தற்போது பாட்டியா தனது சார்பில்  ஜேஎஸ்ஏ சட்டநிறுவனத்தையும் காங்குவால் தரப்பில் கைத்தான் அண்ட் கோ சட்ட நிறுவனத்தையும் நியமித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நிலையில் இண்டிகோ விமான நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது,   இது மற்ற விமான சேவை நிறுவனங்கள் இடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.