வாஷிங்டன்
இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவது குறித்து எவ்வித உத்திரவாதமும் தர முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் பெருமளவில் ஈரான் ஏற்றுமதி செய்து வந்தது. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் முறித்துக் கொண்டது. அதை ஒட்டி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. அதற்கான ஆறு மாதக் கெடு இந்த மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே இதற்கு மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா கூறி உள்ளது.
இதை ஒட்டி இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிடம் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துக் கொள்ள விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டன. அதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால் குறைந்த விலையில் தடை இன்றி தொடர்ந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டது.
இதற்கு அமெரிக்கா நாட்டின் நிதித்துறை செயலர் வில்பர் ராஸ், “இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தடை இன்றி குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என அமெரிக்க அரசை கேட்டுக் கொண்டன. ஆனால் அமெரிக்காவில் எண்ணய் வர்த்தகம் தனியாரால் நடத்தப்படுகிறது. எனவே அரசு அவர்களை விலையை குறைக்கும் படி வற்புறுத்த இயலாத நிலயில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.