புதுடெல்லி: பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின், தன்னை பணியிடை நீக்கம் செய்வதற்கு முன்னால், தன்னிடம் தேர்தல் கமிஷன் சார்பில் எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், அவரின் பணியிடை நீக்கத்திற்கு தடை விதித்துள்ள நிலையிலும், அவர் மேற்கொண்டு தேர்தல் பணியில் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கர்நாடக அரசு சார்பில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் கூறுவதாவது, “நான் செய்த தவறு என்ன என்று தேர்தல் கமிஷனிடம் பலமுறை கேட்டும் எனக்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. என்னை பணியிடை நீக்கம் செய்த தேர்தல் கமிஷனின் உத்தரவில், ஒரு இடத்தில்கூட, எந்த விதிமுறையின் அடிப்படையில் என்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
22 ஆண்டுகளாகப் பணியில் இருக்கும் எனக்கு, அரசியலில் எந்த நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. எப்போதும் விதிமுறைகளின்படியே நான் செயல்பட்டு வருகிறேன். எனவே, குறைந்தபட்சம் எந்த சட்டவிதிமுறையை நான் மீறினேன் என்றாவது எனக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் கமிஷனிடம் பலமுறை கேட்டும் எனக்கான பதில் கிடைக்கவில்லை. ஆனால், என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே, என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
எனது இத்தனை ஆண்டுகால பணியனுபவத்தில், ஒருமுறைகூட நான் எந்தக் குற்றச்சாட்டிற்கும் ஆளானதில்லை மற்றும் எந்த விளக்கம் கேட்பு நோட்டீசும் எனக்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.
– மதுரை மாயாண்டி