சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வழக்குகள் முடிவு பெற்ற தொகுதிகள் உள்பட, சமீபத்தில் மரணம் அடைந்த அதிமுக எம்எல்ஏவின் சூலூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்த தமிழக தேர்தல்ஆணையம் தயாராக உள்ளது என்று தேர்தல் ஆணையம் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை, வழக்கு தொடர்ந்த கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார், அதுபோல, திருப்பரங்குன்றம் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் எம்எல்ஏ இறந்ததால் சூலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுக இரு தரப்பினரும் புகார்களை கூறி வருகின்றனர், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். மேலும், அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்கள், தங்களது வேட்புமனு தாக்கலின்போது, அவர்களின் 5 ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். வேட்பாளர்கள் தவறான தகவலை அளித்திருந்தால், நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறை விசாரணையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
தமிழகத்தில் இதுவரை 209.53 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி, ரூ.29.84 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த தங்கத்தில் 94 கிலோவும், பணத்தில் 4.45 கோடியும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்க, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.