டில்லி: 

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு  கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் காவல்துறையினரும் விழிப்புடன் பல இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள  அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத் திடம், தங்களது கட்சி தேர்தலில் போட்டியிட  சின்னங்கள் ஒதுக்கக்கோரி  மனு கொடுத்திருந்தன.

அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதே வேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னம் கேட்டிருந்தது…ஆனால், அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு   கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கககோரி மனு செய்திருந்த நிலையில், அவர்களுக்கு  கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

வரும் 23ந்தேதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பபடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.