ருணாநிதியும், ஜெயலலலிதாவும் உயிருடன் இருந்தபோது-தி.மு.க.விலும் சரி,அ.தி.மு.க.விலும் சரி –கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள  பேச்சு நடத்த ஒரு குழு அமைத்து விவாதிப்பதும், விருந்தோம்பல் நடப்பதும் பம்மாத்து வேலை தான்.

அந்த இரு ஆளுமைகளுமே- ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை தங்கள் கைப்பட எழுதி-ஒரு கவரில் போட்டு –பேச்சு வார்த்தை குழுவிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

சம்பிரதாயமாக அது பின்னர் ஊடகங்கள் முன் கையெழுத்தாகும்.

மு.க.ஸ்டாலினும் –அப்பாவை அப்படியே பிரதிபலிக்கிறார்.  கூட்டணி கட்சிகளின், இடங்களை அவர் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்.

காங்கிரஸ் தவிர பாக்கியுள்ள -ம.தி.மு.க.வுக்கு 2 ,மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தலா ஒன்று என்பது –அவரது கணக்கு.

எதிர் அணிகளுடன் சேர கொள்கை(?) இடம் தராது என்பதால் –தி.மு.க.கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன கூட்டணி கட்சிகள். கிட்டத்தட்ட உடன்பாட்டில் கையெழுத்து போட தயாராக இருந்த சூழலில்தான்- பாரிவேந்தர் கட்சி தி.மு.க.கூட்டணிக்குள் நுழைந்து –தோழமையை சிதற வைத்து விட்டது.

5 ஆண்டுகளாக பா.ஜ.க.வுடன் ஒட்டிக்கொண்டிருந்தது- பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி.ஒரு தொகுதிக்காக அ.தி.மு.க.வுடன் நடத்திய பேரம், பணியாத நிலையில்- சில நாட்களுக்கு முன்பு கமல் கட்சியுடன் பேச்சு நடத்தியது.

யாரும் எதிர்பாராத வகையில்  நேற்று முன்தினம் தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டது. பாரிவேந்தருக்கு பெரம்பலூர் கொடுக்கப்படும்.

இந்த நிகழ்வு இடதுசாரிளையும்,விடுதலை சிறுத்தைகளையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது. உடனடியாக இதற்கு இடதுசாரிகள் எதிர்வினை ஆற்றாத நிலையில்- சீறி விட்டார்கள் சிறுத்தை கள். அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற இருந்த தொகுதி பங்கீட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்-  திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் தரப்பில் முன் வைக்கப்படும் விளக்கம் இது:

‘’நாங்கள் 5 ஆண்டுகளாக தி.மு.க.கூட்டணியில் இருக்கிறோம். அந்த கட்சி அழைப்பு விடுத்த அத்தனை போராட்டங்களிலும் முதல் ஆளாய் பங்கேற்றுள்ளோம்.எங்களுக்கும் ஒரு இடமாம். ஆளில்லாத ஊரில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் ஐ.ஜே.கே.கட்சிக்கும் ஒரு இடமாம். பணம் பாதாளம் வரை பாயலாம்.எங்களிடம் பாய முடியாது’’ என்று கொதிக்கிறார்கள்- சிறுத்தைகள்.

ஸ்டாலின் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

–பாப்பாங்குளம் பாரதி