சென்னை:
மூக ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பான வழக்கை   சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வரும் முகிலன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். தூத்துக்குடி யில் கடந்த ஆண்டு (2018)  மே மாதம் 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது வன்முறை பரவியது. இதன் காரணமாக காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான  துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ ஆதாரம் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  வெளியிட்டார்.

இதன்பிறகு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். ஆனால், திடீரென அவரை காணவில்லை. , முகிலனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எழும்பூர் ரயில்நிலைய கண்காணிப்பு காட்சி பதிவுகளை காவல்துறைக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அறிக்கையை மார்ச் 4 ம் தேதி அளிக்குமாறு கூறியிருந்தனர்.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.