சென்னை:

மூத்த பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாநில அளவில் இணைந்து உயர்கல்வி காப்போம் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.


மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் காப்போம் இயக்கத்தை தொடங்கி அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், உயர் கல்வியில் ஊழலை ஒழிக்கும் வகையில், உயர்கல்வி காப்போம் இயக்கத்தை மாநில அளவில் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறும்போது, “அரசு, அரசு ஊழியர்கள், கல்வியாளர்களின் குறுக்கீட்டால் பல்கலைக்கழகங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டன. அதன் மரியாதையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

துணை வேந்தர் நியமனத்திலேயே ஊழல் நடக்கிறது. இதனால் சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவ,மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே பயன்பெறும்.

இதற்கு ஒரே தீர்வு, நேர்மையானவர்களை துணை வேந்தர்களாக நியமிப்பதுதான். தனியார் பல்கலைக் கழகங்கள் உட்பட விதிகளை மீறுவோரை தண்டிக்க வேண்டும்.

18 வயதான மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெறும்போது, கல்லூரி சங்கங்களில் அவர்கள் ஈடுபட மட்டும் ஏன் தடை விதிக்கவேண்டும் என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்ட வேண்டும்.

பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர் உரிமை நிலைநாட்டப்படவில்லை. மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் கட்டுப்படுத்தி வைக்கின்றன என்றார்.