சென்னை:
தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏலம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் தற்போது 3வது முறையாக வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த , கடந்த அக்டோபர் மாதம் இந்தியா முழுவதிலும் சுமார் 55 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டது.
இதில், காவிரி டெல்டா பகுதிக்கான உரிமத்தை வேதாந்தா நிறுவனமும், ஒரு தரைப் பகுதிக்கான உரிமத்தை ஓஎன்ஜிசியும் பெற்றுள்ளது. பின்னர் 2வது கட்டமாக கடந்த ஜனவரி 4ந்தேதி வெளியிடப்பட்ட ஏலத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்ட தெற்கு பகுதிகளில் 474 ச.கி.மீ பரப்பளவில்,14 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதி கோரியிருந்தது. இதற்கான உரிமம் வரும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் யார் யார் உரிமம் பெற்றுள்ளார்கள் என்பது தெரிய வரும்.
இந்த நிலையில், 3வது கட்டமாக கடந்த 11-ம் தேதி ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதில், இந்தியா முழுவதுமான 23 வட்டாரங்களில் தமிழகத்தின் காவிரி டெல்டாவையும் உள்ளடக்கி 2 வட்டாரங்கள் அடங்கி உள்ளது. இதற்க உரிமம் ஏப்ரல் 10ந்தேதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி காவிரி டெல்டாவை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஏலம் விட்டு வருவது டெல்டா மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. சமூக ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது முதல் திருவாரூர் மாவட்டம் உள்பட பல இடங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜன.26-ம் தேதி முதல், திருக் காரவாசலில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரவுநேர காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
மக்களுக்கு பாதகத்தை ஏற் படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட் டோம் என்பதில் தெளிவாக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் கூறினாலும், மக்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அதிமுக கூட்டணி கட்சியான மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருவது மக்களிடையே மத்திய மாநில அரசுககள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத் தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல், வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.